பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027இல் ஆரம்பிக்கத் தயார்.

முதலாம் தர மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க நடவடிக்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் வலியுறுத்தப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ,

2026ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்கள் இனிவரும் காலங்களில் கண்காணிக்கப்படும். முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாடுகள் அடங்கிய நூல்களை அச்சிடுவதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தவணைக்கான செய்முறைச் செயற்பாட்டு நூல்களை ஏப்ரல் பாடசாலை விடுமுறையின் பின்னர் மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், 6ஆம் தரத்திற்குரிய அனைத்துப் பாட அலகுகளும் (Modules) விசேட குழுக்கள் ஊடாக ஆழமாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மதிப்பீடுகள் மற்றும் பெறுபேறு கணிப்பீடுகள் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச வளவாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த வளவாளர்கள் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையக் கல்வி தொடர்பான ’தேசிய வழிநடத்தல் குழுவை’ நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான வழிநடத்தல் குழுக்களை நியமிப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் முன்மொழிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவாகும் என நான் கருதுகின்றேன்.

2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தொடர்பான ஆணைக்குழுவொன்று இருப்பதை நாம் 2025ஆம் ஆண்டிலிருந்தே உணரத் தொடங்கினோம். அதன் பின்னர், இந்த ஆணைக்குழுவைச் செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக, பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் ஆணைக்குழுவின் தேவைக்கேற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஏராளமான தடைகளும் சவால்களும் இருந்து வந்தன.

குறிப்பாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது, தனது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம், செயற்பாட்டிற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை வரையறுப்பதற்கான சுதந்திரம், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் வருடாந்தத் திட்டங்களுக்கு அமைவான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல நடைமுறைச் சாத்தியமான நிலைமைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்ற போது, சுமார் 4,000-இற்கும் அதிகமான கோப்புகள் விசாரணைகள் முடிந்த நிலையிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்தன. மேலும், அங்கு வெறும் 31 சட்ட அதிகாரிகள் மாத்திரமே பணியில் இருந்தனர்.

இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படுவதன் மூலம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரம், நிதி விவகாரங்களில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை ஆகியவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புதிய அரசியல் கலாசாரத்தினுள் ஊழலற்ற, லஞ்சத்துக்கு எதிரான சுத்தமான அரச சேவையை உருவாக்குவதற்கான மிக முக்கியமானதொரு அடித்தளம் இடப்படுகின்றது, என அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியன பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வாறான நிலைமைகளை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாதுள்ளது. இப்பாதிப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தருணமாகும். இருப்பினும், அரசாங்கம் என்ற ரீதியில் இம்மாற்றங்களை இனங்கண்டு, அதன் மூலம் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதே எமது பொறுப்பாகும். அதற்காக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விசேட குழுக்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய,அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான குழு. அரசத் துறையில் எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் தற்போதுள்ள முறைகளுக்கு மேலதிகமாகப் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கான குழு. இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், குறிப்பாகச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணுதல் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இவை நாம் ஒரு நாடாகக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளாகும். இதற்காக எமது அரச சேவையினரும், தனியார் துறையினரும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி அரசியல் அதிகாரத் தரப்பினரும், நாட்டு மக்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்டது போலவே, இப்போதும் நாம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும். சரியான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்தினூடாக, தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு இந்த இக்கட்டான நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, எனப் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மாத்திரமல்லாது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். - ​பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

​சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் சமூகத்தின் ஒரு சாராருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மக்களும் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின், ’வளமான கிராமம்’ செயற்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட அங்குணகொலபெலஸ்ஸ குளத்தை அண்டிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில், மார்ச் 15ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

​அங்குணகொலபெலஸ்ஸ “leisure Island” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாகப் படகுத் தங்குதுறை மற்றும் “leisure Island” உணவகம் என்பனவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

“அங்குணகொலபெலஸ்ஸ குளத்தை அண்டிய இந்தப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக எழுநூறு நாட்களுக்கும் மேலாக மக்கள் தாமாக முன்வந்து தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். அது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையினால் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, இப்பிரதேசத்தின் கோட்டச் சபைகள், மக்கள் பாதுகாப்புக் குழுக்கள், இளைஞர் கழகங்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைவரினதும் ஒன்றிணைந்த பங்களிப்புடன் மிகக் குறுகிய காலத்தில் இந்த இடம் ஒரு பாரிய திட்டமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது.

ஒரு நல்ல நோக்கத்திற்காக அனைவரும் கூட்டாக இணையும்போது நம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்துச் செய்யக்கூடிய காரியமல்ல. நாட்டின் புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பலமான, சரியான தலைமையுடன் ஒன்றிணையும்போது, எந்தவொரு எதிர்சக்தியாலும் தகர்க்க முடியாத வலுவான நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.

​அன்றாடப் பணிகளால் ஓய்வற்ற வாழ்க்கையைக் கழிக்கும் கிராமப்புற மக்களுக்கும் சுதந்திரம் அவசியமானது. சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு உன்னதமான கலாசார வாழ்வை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கம் என்ற வகையில்; மக்கள் பொழுதுபோக்கிற்காகவும், உலாவச் செல்வதற்கும், நிம்மதியாக நேரத்தைக் கழிப்பதற்கும் இவ்வாறான இடங்களை அதிகளவில் நிர்மாணிப்பது மிகவும் முக்கியமானது" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உள்ளிட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பதவி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை உரிய முறையில் ஏற்று, குறிப்பிடப்பட்ட இடங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும்.

2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்தல் வேண்டும்.

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் நிகழ்ச்சியில் இன்று (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். தற்போது 6ஆம் தரத்தில் உள்ள மாணவர்களை இப்புதிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஆராய ஒரு குழுவினை நியமித்துள்ளோம். அக்குழுவின் அறிக்கையின்படி எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.

வகுப்பறைகளின் அடிப்படை வசதிகள், வகுப்பறைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆரம்பப் பிரிவு வகுப்பறையில் 25-30 மாணவர்களும், இரண்டாம் நிலைப்பிரிவில் 35 மாணவர்கள் வரையும் உள்வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளக் கூடாது.

வகுப்பறைகளை அபிவிருத்தி செய்யும்போது, அவை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களைப் பொறியியல் பிரிவினர் தற்போது தயாரித்து வருகின்றனர். பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகளை மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளக் கூடியவையாகும். சுகாதார வசதிகளை மேம்படுத்துவது முதல் அனைத்துப் புனரமைப்புப் பணிகளையும் தரமான முறையில் முன்னெடுக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிதியினை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவே, கட்டமைப்புக் குழுக்களின் ஊடாக முறையான திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் அவற்றைச் சமர்ப்பியுங்கள். ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.

2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் Smart Board மற்றும் இணைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெற்றோரிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடசாலைக்கும் அனுமதிக்கப்பட்ட வருடாந்த நிதி ஒதுக்கீடு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாகப் பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். குறிப்பாகப் பாடசாலை வைபவங்களின் சுமையைப் பெற்றோர் மீது சுமத்தாத விதத்தில் அவற்றை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

பல வருடங்களாக ஆசிரியர், அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகப் பெருமளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விசாரணையில் இருந்த வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நாம் 23,000 ஆசிரியர்களை முறையாகச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறவுள்ளன.

அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாம் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பித்துள்ளார்கள். சம்பளப் பிரச்சினை ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனினும், பதவி நியமனம் வேண்டிப் போராட்டம் நடத்துபவர்கள், நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது அவற்றைப் பொறுப்பேற்கத் தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம்; ஆயினும் பதவியை ஏற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியும் என்ற ஒரு கருத்து நிலவி வருகின்றது. இதனால் ஒட்டுமொத்தக் கல்வித்துறையிலும் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

சிலர் அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காது, ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகவே தொடர்ந்தும் கடமையாற்றும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும் அதற்கு இடமளிக்க இயலாது. இது ஒரு கௌரவமான சேவையாகும். ஆகையினால், அதிபர் சேவையின் தொழில்சார் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை பாராளுமன்றக் கல்விச் சபையூடாகத் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, அந்தந்தப் பிரிவுகளில் நிலவும் நிலைமைகளை எதிர்வு கூறி, கட்டமைப்புக் குழுக்கள் ஊடாக அத்திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நாம் முன்மொழிந்துள்ளோம்.

அத்துடன், மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது தீர்மானங்கள் அறிவிக்கப்படும் வரை காத்திராது, கோட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் துரித தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பலாந்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் இன்று (15) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அவற்றை கவனத்தில் கொண்ட பிரதமர் அங்கு உரையாற்றுகையில்,

முன்பள்ளிக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளை ஒட்டுமொத்த சமூக மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. 2024இல் இந்நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்டு, சரியான பொருளாதாரக் குறிகாட்டிகளை நிவர்த்தி செய்வதே எமது பிரதான சவாலாக இருந்தது. அதற்கமைய, 2025ஆம் ஆண்டு சவாலான ஆண்டாக அமைந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வரவும், வரவு செலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்தவும் எம்மால் முடிந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் வேளையிலேயே மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானது. அதன் தாக்கம் எமது நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு அதிகளவான வெளிநாட்டு வருமானம் மத்திய கிழக்கில் பணியாற்றும் எமது சகோதர சகோதரிகளிடமிருந்தே கிடைத்து வந்தது. இன்று அவர்களின் உயிருக்கும் வேலைவாய்ப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மத்திய கிழக்கு வான்பரப்பு மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்துள்ளது. அத்தோடு எரிபொருள் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களும் எழுந்துள்ளன. போர் நீடித்தால் எமக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யச் செலவுகளை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

எமக்குக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தபோதிலும், மேலும் கடன் வாங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க நாம் விரும்பவில்லை.

எமது கல்வி மறுசீரமைப்புக் கொள்கையிலேயே முன்பள்ளிக் கல்வியை மறுசீரமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவரையான காலப்பகுதியில் முன்பள்ளிகளை ஆரம்பித்தல் மற்றும் ஆரம்ப சிறுவர் பருவ அபிவிருத்தி நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகையினால், அனைத்து முன்பள்ளிகளையும் ஒழுங்குபடுத்தவும் தரப்படுத்தவும் வேண்டியுள்ளது. இது எளிதான காரியமல்ல.

எனவே, முதலில் அனைத்து முன்பள்ளிகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிக்காக ஏற்கனவே ஒரு பாடத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம். 2027இல் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாகக் கட்டமைப்பொன்றின் மூலம் முன்பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முன்பள்ளி டிப்ளோமாவுக்காக அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறைத் தகைமைகளை வளர்க்கவும், அவர்களை ஒரு முறையான சம்பளப் படிமுறைக்குள் உள்வாங்கவும் நாம் படிப்படியாக நடவடிக்கை எடுப்போம்.

முன்பள்ளிகள் மாகாண சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் உட்பட்டவை என்பதால், விடயப்பரப்பிற்குப் பொறுப்பான அமைச்சு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். எனவே, முன்பள்ளி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கக் கட்டமைப்புக்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஊடாகத் திட்டமிட்டுச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து கவனமாக இருங்கள்!

“சந்தேஷய” ஊடக விருது வழங்கல் விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்து

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கநெறி, பொறுப்புணர்வு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையை ஊக்குவித்து, தேசிய ஊடகக் கலந்துரையாடல்களில் அவர்களைச் செயற்திறனுடன் பங்கெடுக்கச் செய்யும் நோக்கில், கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் மார்ச் 14ஆம் திகதி நடைபெற்ற “சந்தேஷய” ஊடக விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு ’வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும்’, பாடசாலை மட்டத்திலான திறமையாளர்களுக்கு ஊடக விருதுகளும் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

தகவல் தொழில்நுட்பமும் ஊடகத்துறையும் மிக வேகமாக மாற்றமடைந்து வரும் ஒரு காலகட்டத்திலேயே நாம் வாழ்கிறோம். இந்த மாற்றங்கள் எமக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் அதேவேளை, பல சவால்களையும் எமக்கு முன்னால் நிறுத்தியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தாலும் ஊடகங்களாலும் மாற்றமடைந்த ஒரு உலகில் வாழ்வதற்கு எமது எதிர்கால சந்ததியினரை நாம் தயார்படுத்த வேண்டும்.

இன்று ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கும்போது, ஊடகங்களும் தகவல்களும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறலாம். கடந்த காலங்களில், அறிவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒரு குறிப்பிட்ட சலுகை பெற்ற அல்லது அதிகாரம் கொண்ட குழுக்களிடமே இருந்தது. எத்தகைய தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி ஒரு சிறிய குழுவிடமே காணப்பட்டது. ஆனால், இன்று தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகத் தரவுகளும் அறிவும் நம் அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இன்று நாம் வெறும் ஊடகப் பார்வையாளர்களோ அல்லது நுகர்வோரோ மட்டுமல்ல; பிரஜைகள் என்ற ரீதியில் இன்று ஒவ்வொருவரும் ஒரு ஊடகவியலாளராக மாற முடியும். தகவல்களைக் கையாளவும் பகிரவும் மக்களுக்கு இன்று பாரிய வாய்ப்புகள் உருவாகியிருப்பது ஒரு சிறந்த விடயமே என்ற போதிலும், அதில் ஒரு பாரிய ஆபத்தும் இருக்கவே செய்கின்றது. ஊடகவியலில் இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் இன்று பெரும் பிரச்சினைகளையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை எதுவென்று கண்டறிய முடியாத அளவிற்குத் தகவல்கள் இன்று எம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகிறது. எமது நாட்டில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது, தவறான அல்லது திட்டமிட்டுச் சிதைக்கப்பட்ட தகவல்களினால் சமூக மோதல்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம்; மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிகழ்வுகளையும் கண்டிருக்கிறோம்.

எமது அறியாமையிலேயே சில சமயங்களில் நாம் இணையத்தளங்களின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்கிறோம். எமக்குத் தேவையானவை, தேவையற்றவை என அனைத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்கிறோம். ஆனால், இதன் மூலம் எமது தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் சேகரிக்கப்படுவதை நாம் மறந்துவிடுகிறோம். ஒரு தவறான விடயம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவிட்டால், அதனை மக்களின் நினைவிலிருந்து அகற்றுவது மிகக் கடினம்.

அத்தோடு, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஊடகங்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. சமூகத்தின் இருப்புக்கும் பிரஜைகளுக்கு இடையிலான நல்லுறவுக்கும் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். அதன் மூலமே ஒரு சமூகத்தின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் இருப்பை உறுதி செய்ய முடியும்.

ஆயினும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் இன்று என்ன நேர்ந்துள்ளது? எமது தலைவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை, பெரியவர்களை நாம் நம்புவதில்லை. எமக்குக் கிடைக்கும் ஒரு செய்தியை எவ்வாறு நம்புவது என்ற சந்தேகம் எமக்குள் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒரு சமூகத்தில் நம்பகத்தன்மை சீர்குலையும்போது, அச்சமூகம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும்.

எனவே, தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் கலாசாரத்தை உருவாக்குவது, நம்பகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதவை. ஆகவே, ஊடகத்துறைக்குள் பிரவேசிக்கும் உங்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது.

இன்று நாம் கௌரவித்த இந்தச் சிரேஷ்ட ஊடகவியலாளர்களைப் போலவே ஒருநாள் நீங்களும் இத்துறைக்கு வருவீர்கள். ஆனால், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கும் நீங்கள் பணியாற்றும் காலத்திற்கும் இடையே பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஊடகத்துறையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் நீங்கள் வழங்கும் தகவல்களுக்காகக் குரல் கொடுக்கவும் வேண்டிய விசேட பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் வழங்கும் தகவல் உண்மையா, அது யாரைப் பாதிக்கும் என்பன குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அதேவேளை, ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. இதனாலேயே டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் ஊடக எழுத்தறிவு என்பவற்றை நாம் கட்டாயத் தேவையாகக் கருதுகிறோம். அதனாலேயே எமது கல்விச் சீர்திருத்தங்களில் இத்தகைய பாடங்களையும் கருத்துருக்களையும் உள்வாங்க வேண்டும் என நாம் எண்ணுகிறோம்.

இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பிறருக்குப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஆனந்தக் கல்லூரியின் அதிபர் டி.எம்.எல்.பி. திசாநாயக்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு